வேலை கொடுப்பதாக 1,300 பொறியியல் பட்டதாரிகளை மோசடி செய்த எல்.&.டி இன்ஃபோடெக் நிறுவனம்
எல்&டி இன்ஃபோடெக் நிறுவனம் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 1,300 பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாக ஒன்றரை வருடம் இழுத்தடித்து மோசடி செய்திருக்கிறது. 2014-ம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பை முடித்த இந்த மாணவர்களை பல கட்ட தேர்வுகளில் சோதனை செய்த பிறகு வேலை வழங்கும் கடிதத்தை (offer letter)-ஐ கொடுத்தது, எல்&டி இன்ஃபோடெக் நிறுவனம். ஆனால், வேலையில் சேர்வதற்கான தேதியை பல முறை ஒத்திப் போட்டு, 18 மாதங்களுக்குப் பிறகு இன்னும் ஒரு தகுதித் தேர்வு நடத்துவதாக போக்கு காட்டி, (offer letter)-ஐ ரத்து செய்திருக்கிறது.
நாடெங்கிலும் லட்சக்கணக்கான பொறியியல் முடித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கும் நிலையில் எல்.&.டி இன்ஃபோடெக் நிறுவனம் இந்த இளம் பட்டதாரிகளை அநியாயமான (unethical), தொழில் முறையற்ற (unprofessional), மனிதத் தன்மையற்ற (inhuman), பொறுப்பற்ற (irresponsible) முறையில் நடத்தியதை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி. ஊழியர் பிரிவு வன்மையாக கண்டிக்கிறது.

• எல்.&.டி இன்ஃபோடெக் நிறுவனம் தனது தவறான, முறைகேடான செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தப் பட்டதாரிகளை உடனடியாக வேலையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
• பல லட்சம் ரூபாய் செலவில் பொறியியல் படிப்பை முடித்திருக்கும் மாணவர்களின் வளாக நேர்முக வாய்ப்பை பறித்து, ஒன்றரை வருடம் காத்திருக்க வைத்ததற்கான இழப்பீட்டு தொகையை எல்.&.டி நிறுவனம் வழங்க வேண்டும்.
கூடவே, எல்.&.டி இன்ஃபோடெக் நிறுவனம் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

1. “படிப்பை முடித்தவுடன் முன்னணி நிறுவனங்களில் வேலை” என்று பெரும் செலவில் விளம்பரம் செய்து மாணவர்களை சேர்க்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளுடன் வளாக நேர்முகத்தில் ஆள் எடுப்பது தொடர்பாக எல்.&.டி நிறுவனம் ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறதா?
2. வளாக நேர்முகத்தில் வேலைக்கு ஆள் எடுப்பது தொடர்பாக, எல்.&.டி இன்ஃபோடெக் மனித வளத்துறை அதிகாரிகளுக்கும், கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலருக்கும் இடையே ரகசிய, சட்ட விரோதமான ஊழல் நடைபெறுகிறதா?
3. பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களையும், புதிதாக எடுக்கப் போவதாக சொல்லும் ஊழியர்களையும் பட்டியலில் காட்டி தனது வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் சந்தைப்படுத்தும் எல்&.டி இன்ஃபோடெக் நிறுவனம் தனது ஊழியர்களை தேவைப்படும் போது பயன்படுத்திக் கொண்டு, தேவை தீர்ந்ததும் அல்லது தேவை இல்லா விட்டால் தூக்கி எறிந்து விடும் சரக்காக மட்டுமே பார்க்கிறதா?
4. புதிய ஊழியர் சேர்க்கையை கூட திறம்பட செய்ய முடியாமல் 1,300 இளைஞர்களின் வாழ்க்கையை குலைத்திருக்கும் எல்.&.டி நிறுவனம் வாடிக்கையாளருக்கும், முதலீட்டாளர்களுக்கும், சமூகத்துக்கும் ஆற்றுவதாக சொல்லிக் கொள்ளும் கடமைகளிலும் இதே போல், திறனற்ற, திட்டமிடாத, மோசடியான, பொறுப்பற்ற முறையில்தான் செயல்படுகிறதா?
1,300 தொழில்முறை பட்டதாரிகளுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி, அவமானம் தொடர்பான தமது கண்டனங்களை ஐ.டி துறை ஊழியர்கள் அனைவரும் எல்.&.டி நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலமாகவும், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மூலமாகவும் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இந்தியாவின் 30 லட்சம் ஐ.டி ஊழியர்களும் தமது படிப்புக்கும், தகுதிக்கும், உழைப்புக்கும் ஏற்ற மதிப்பும் கௌரவமும் மறுக்கப்பட்டு, ஆரோக்கியமற்ற போட்டியின் காரணமாக உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர். 40 வயதுக்கு முன்பாகவே ஓய்வுபெறும் முதுமை நிலைக்கு தள்ளப்பட்டு வாழ்க்கையை இழக்கின்றனர். இந்த பிரச்சனைகளை எதிர் கொண்டு தமது வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள இந்திய அரசியல் சட்டமும், தொழிலாளர் சட்டங்களும் வழங்கியுள்ள உரிமைகளை பெறுவதற்கு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியில் ஐ.டி ஊழியர் பிரிவில் தம்மை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
• 1,300 இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாக மோசடி செய்த எல்.&.டி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படியும்
• தனியார் கல்லூரி நிர்வாகங்கள் வேலை தேடிக் கொடுப்பது தொடர்பாக செய்யும் மோசடிகளை தடுத்து நிறுத்தும்படியும்
• தனியார் கல்லூரியில் படித்து வேலை கிடைக்காத பட்டதாரிகள் கல்விக்காக செலவழித்த தொகையை கல்லூரிகள் திருப்பிக் கொடுக்கும்படி சட்டம் இயற்றும் படியும்
மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,

ஐ.டி ஊழியர்கள் பிரிவு
NDLF I.T. Employees Wing
9003198576
combatlayoff